search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவையில் உரிமை பிரச்சினை"

    சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணன் தடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி யதிஷ் சந்திராவுக்கு எதிராக மக்களவையில் பொன்.ராதாகிருஷ்ணன் உரிமை பிரச்சினையை எழுப்பினார். #Minister #PonRadhakrishnan #PrivilegeMotion #KeralaCop #YathishChandra
    புதுடெல்லி:

    சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, இந்து அமைப்பினரின் போராட்டங்களை தடுப்பதற்காக சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் சபரிமலை அய்யப்பனை தரிசிப்பதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த மாதம் 21-ந்தேதி பா.ஜனதா தொண்டர்களுடன் சென்றார். இருமுடிக்கட்டுடன் சென்ற அவரை ஐ.பி.எஸ். அதிகாரி யதிஷ் சந்திரா தலைமையிலான போலீசார் நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தினர்.



    பின்னர் மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் அரசு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும், மீதமுள்ளவர்கள் வந்த தனியார் கார்களை அனுமதிக்கமாட்டோம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், பிற பக்தர்களுடன் அரசு பஸ்சில் சபரிமலைக்கு சென்றார்.

    இந்த பிரச்சினை நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஐ.பி.எஸ். அதிகாரி யதிஷ் சந்திராவுக்கு எதிராக மக்களவையில் பொன்.ராதாகிருஷ்ணன் உரிமை பிரச்சினையை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சபரிமலைக்கு செல்லும் வழியில் போலீசார் என்னை தடுத்து நிறுத்தி, தனியார் வாகனங்கள் அதற்கு மேல் செல்ல முடியாது எனக்கூறினர். மேலும் அரசு பஸ்களில் பக்தர்களை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர்.

    சபரிமலையில் நிலச்சரிவு மற்றும் நெரிசல் ஏற்படும் எனக்கருதி தனியார் வாகனங்களை அனுமதிக்கவில்லை என போலீசார் கூறினர். ஆனால் அரசு பஸ்களை அனுமதிக்கின்றனர். இது குறித்து அவர்களிடம் கேட்டதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

    இதற்கு பதிலளிப்பதற்கு பதிலாக, அங்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பொறுப்பேற்க முடியுமா? என்று என்னிடமே போலீஸ் அதிகாரி கேள்வி எழுப்பினார். இது மக்கள் பிரதிநிதியை அவமதிக்கும் செயலாக கருதுகிறேன்.

    இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    இதைக்கேட்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இந்த பிரச்சினை குறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.  #Sabarimala #PinarayiVijaya #PonRadhakrishnan
    ×